ரோஸ் மற்றும் தங்க நிற பாரம்பரிய திருமண ஆடை, திறந்தவெளி பூந்தோட்டம் மற்றும் போல்கொட நீரேந்துப் பகுதி பின்னணியில் அமைந்த அழகிய காட்சிகளுடன் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் ஒரு நபராக அவர் மாறியுள்ளார். பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான டிஷ்னி ராஜபக்ஷ தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்ததை அடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தனது தந்தையின் மூத்த சகோதரியின் மகனான ரஜித்தை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திருமணத்திற்கான முன்னோட்டத்தை கடந்த ஜூலை மாதத்திலும் காணக்கூடியதாக இருந்தது. அப்போது சின்னமன் லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புகைப்படப்பிடிப்பின் தகவல்களை டிஷ்னி இணையத்தில் பதிவிட்டிருந்தார். புதுமணத் தம்பதிகளின் இலக்கு திருமண பாணியில் (destination-wedding style) அது அமைந்திருந்தது.
டிஷ்னி (உமாரியோ அல்லது உமங்கி) ராஜபக்ஷ என்பவர் அழகு மற்றும் நடிப்புடன் மட்டும் நின்றுவிட்ட யுவதியல்ல. 1999 ஆம் ஆண்டு குருணாகலில் பிறந்து, மாலியதேவ மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற இவர், பாடசாலை வலைப்பந்தாட்ட அணியின் தலைவியாகவும் செயற்பட்டுள்ளார். நாடக மற்றும் நடனக் குழுக்களில் முக்கிய நபராக விளங்கிய டிஷ்னி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அகில இலங்கை பாலே நடனப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.
இவரது பெற்றோரான காமினி மற்றும் சேனாணி ராஜபக்ஷ, ஆரம்பத்தில் இவர் மொடலிங் அல்லது நடிப்பில் ஈடுபடுவதை விடக் கல்வியில் கவனம் செலுத்துவதையே விரும்பினர். யசோதரா மற்றும் சரலா ஆகிய இரு சகோதரிகளைக் கொண்ட டிஷ்னி, பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் தனது கலைக் கனவுகளையும் சமநிலையில் பேணி வந்தார். அதற்கமைய இவர் அவுஸ்திரேலியாவில் குழந்தை உளவியல் மற்றும் கல்வியியல் துறையில் முதுகலை பட்டத்தை நிறைவு செய்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தையும், 2020 இல் மிஸ் குயின் ஒஃப் இன்டர்நேஷனல் டூரிஸம் பட்டத்தையும் வென்ற இவர், கலைத்துறையில் பரந்த வரவேற்பைப் பெற்றது 2021-22 காலப்பகுதியில் ஒளிபரப்பான ஹிரு மெகா ஸ்டார்ஸ் சீசன் 3 மூலமாகும். ஏக்க தவசக்க அபி (2018), சூஸ்தி (2020), ஆலே கொரோனா (2021), ரேணுவாக நடித்த பீகொக் லெமென்ட் (2022) மற்றும் சீரு வென் (2024) போன்ற படைப்புகளும், ராவணா தொலைக்காட்சி நாடகம் தொடர்பான படைப்புகளும் அவரது நடிப்பு வாழ்வின் முக்கிய மைல்கற்களாகும்.
அவரது உண்மையான திருமண நிகழ்வு பற்றிய செய்தி உறுதியானதை அடுத்து, 2021-22 காலப்பகுதியில் பரவிய வதந்திகளுக்கு இயல்பாகவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெகா ஸ்டார்ஸ் மேடைக்குப் பின்னர், கால, ஹெப்பி பர்த்டே மற்றும் திவிதுரா போன்ற படைப்புகள் மூலம் பிரபலமான நடிகரும் பாடகருமான சூரிய தயாரத்னவுடன் (சூரியலோக) இணைந்து டிஷ்னி போஸ் கொடுத்த திருமண புகைப்படங்களை சில யூடியூப் தளங்கள் இரகசியத் திருமணம் எனப் பிரச்சாரம் செய்திருந்தன. அத்துடன் பிரபல நடிகர் சன்ன பெரேராவுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி வதந்திகளும் பரவின.
எனினும், ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கதைகள் நீண்ட தூரம் செல்லவில்லை. தனது தந்தையின் மூத்த சகோதரியின் மகனான ரஜித்துடனான தனது 6 ஆண்டுகால காதல் உறவு இவ்வாறு திருமணத்தில் முடிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரஜித் தன்னை 'சுது அம்மி' என்றும் தான் ரஜித்தை 'அப்பச்சி' என்றும் அழைப்பதாக திருமண நாளன்று அவர் குறிப்பிட்டார். தனது வளர்ப்பு நாய்க்குட்டிக்கும் திருமண நாளில் விசேட இடத்தை வழங்க டிஷ்னி மறக்கவில்லை.



